பழங்கால தமிழகத்தில் மருத்துவமனைகள்:
சங்ககாலம்(கிமு 300 முதல் கிபி 300)வரை மற்றும் பல்லவர்காலம் கிபி 610 ஆகிய காலகட்டம் சார்ந்த மருத்துவர்கள் பற்றியும்,மருத்துவத்தினை பற்றியும் குறிப்புகள் நமக்கு கிடைதுள்ளன. மருத்துவமனைகளுக்கு அக்காலத்தில் ஆரோக்கியசாலை,மருந்தகம்,வைத்தியசாலை முதலிய பெயர்கள் இருந்துள்ளன.
ஆதுலர்சாலையை ஆதுலர்+சாலை என்று பிரித்து பொருள் கொண்டால்,ஆதுலர் என்பதற்க்கு உடல்நலம் பாதிக்கபட்டவர் என்றும்,சாலை என்பதற்கு மருத்துவநிலையம் என்றும் பொருளக்கொண்டு,உடல்நிலை பாதிக்கபட்டவர்களுக்கான மருத்துவநிலையம் என்றும்,நோய்வாய்பட்டவற்கான பாதுகாப்பு நிலையம் என்றும் பொருள் சொல்லமுடிக்கிறது.
ஆதுலர்சாலையில் மூலிகைவைத்தியம்,அறுவைசிகிச்சை வைத்தியம்,மகப்பேறு வைத்தியம் முதலிய மருத்துவபிரிவுகள் இருந்துள்ளன. இவற்றில் பணியாற்றுவதற்க்கு வைத்தியசாஸ்திரம் என்ற மருத்துவபடிப்பை ஆதுலர்கள் படித்துள்ளனர். இப்படிப்பை சொல்லிக்கொடுப்பதற்க்கு மருத்துவபள்ளிகளும் இருந்துள்ளன. இதில் மருந்துகளின் தன்மையை பற்றியும்,அவை குணபடுத்துகின்ற நோய்கள் பற்றியும் கற்றுதந்துள்ளனர். அக்கால மருத்துவர்கள். ஆதுலர்,சுவர்ணர்,பெரும்மருத்துவர்,வைத்தியர் முதலிய பெயர்களில் அழைக்கபாட்டுள்ளனர். மக்கள் தன்வந்திரி என்ற மருத்துவ கடவுளை வணங்கி வந்துள்ளனர். இவற்றை பற்றி பல்லவர்,சோழர்,போசளர்,விஜயநகர அரசு முதலிய பேரரசுகளின் காலங்களில் குன்றத்தூர்,கோவில்தேவராயன்பேட்டை,சிறுவாக்கம்,சிதம்பரம்,தஞ்சாவூர்,திருவாடுதுறை,திருபுகாலூர்,திருமுக்கூடல்,திருவரங்கம் முதலிய ஊர்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
சங்ககாலத்தில் அறுவைசிகிச்சை மற்றும் மருத்துவர்கள்:
சங்ககாலத்தில் கிமு 300 முதல் கிபி 300 வரை வாழ்ந்துள்ள சல்லியங்குமரனார்,மருத்துவன் தாமோதரனார்,மருத்துவர் நல்லச்சுதனார் முதலிய புலவர்களின் பெயர்களில் வரும் முன்பெயரை கொண்டு,இவர்கள் மருத்துவர்கள் தான் என்று நாம் அறிய முடியும். மருத்துவர்கள்,மக்களுக்கு மருந்து கொடுத்துள்ளதையும்,அக்காலத்தில் வைத்தியசாலைகளை வீட்டில் அல்லது பொது இடங்களில் அமைத்து மருத்துவம் பார்த்ததை அறியமுடிகிறது. மேலும் அறுவைசிகிச்சை முறை என்பது முதன் முதலில் மேற்கத்திய நாடுகளில் தான் தோன்றின என்ற கருத்து பரவலாக உள்ளன. ஆனால்,2000 ம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழகத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர் அதற்க்கு குறிப்புகளும் நம் சங்க இலக்கியதில் உள்ளது.
"இரும்பனம் புடைய லீகை வானகழல்
மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயரந்தென்ன வெடுவல் ஊசி
நெடுவரி பரந்த வாடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர் நேர்ந் தோரல்லது
தும்மை கூடாது மலைந்த மாட்சி"
என்ற பதிற்றுபற்று வரிகள் சங்க காலத்தில் இருந்த ஊசி கொண்டு உடலை தைக்கும் அறுவைசிகிச்சை முறையை பற்றி நமக்கு எடுத்து கூறுகிறது.
மேலும் சங்க காலத்தில் மருத்துவம் பார்த்த மருத்துவர்களை அறவோன் என்று அழைத்துள்ளனர்.
"அரும்பிணி உறுநர்க்கு வேட்டவை கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுக்கும் அறவோன்"
என நற்றிணை 136 வது பாடல் நோயினை கண்டறிந்து அதற்க்கு ஏற்றாற்போல் மருந்துகொடுப்பவர்கள் அறவோன் எனபடுவார்கள் என்று கூறுகிறது.
"பிறர் நோயும் தம்நோய் போல் போற்றி திறன்அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்."
என்ற கலித்தொகை வரிகள் பிணி உடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தன்னை நோயாளி என நினைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறுகிறது.
சங்க காலத்தில் ஏராளமான நோய்கள் பற்றியும் அந்த நோய்களை குணபடுத்தும் மூலிகைகள் பற்றியும் நம் பழங்கால தமிழர்கள் நன்கு அறிந்து வைத்து இருந்தனர்.
"அருந்துயர் அவல தீர்க்கும் மருந்துபிறிது இல்லையான் உற்ற நோய்ககே"
நோயாளிகளின் நோயையும்,துன்பத்தையும் தீர்ப்பது ஒரு மருத்துவரின் கடமை என இந்த நற்றிணை வரிகள் நமக்கு கூறுகிறது.
"செருவா யுழக்கி குருதி யோட்டிக் கதுவாய்
போக்கி துதிவா யெகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணார்
அஞ்சுதகதவு உடையர் இவள்
தன்னை மாரே"
என்ற புறநானூறு 353 பாடலின் வரிகள் போரில் கிழிந்த தசையை ஊசியை கொண்டு தைத்தார்கள் என்று கூறுகிறது.
இப்படி சங்க காலத்தில் அறுவைசிகிச்சை பற்றியும் மருத்துவம் பற்றியும் ஏராளமான குறிப்புகள் உள்ளன.
பிற்காலத்தில் அறுவைசிகிச்சை மற்றும் மருத்துவர்கள்:
பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் (கிபி 610-630) செங்கல்பட்டு மாவட்டம்,காஞ்சிபுரம் வட்டதில் அமைந்துள்ள சிறுவாக்கம் என்ற ஊரிலுள்ள கல்வெட்டில் பெரும்மருத்துவனார் என்ற மருத்துவர் இருந்துள்ளதையும்,இரண்டாம் நந்திவர்மனின் காலத்தில் (கிபி 731-796) வைத்தியருக்கு வைத்தியபோகம் கொடுக்கபட்டுள்ளதையும் அறியமுடிகிறது. இவற்றின் மூலம் பல்லவர் காலத்தில் ஆதுலர்சாலை இருந்துள்ளதை உணரமுடிகிறது.
சோழர்காலத்தில் முதலாம் ராஜேந்தரசோழரின் 3 ம் ஆட்சியாண்டில் (கிபி 1015) தஞ்சாவூர் மாவட்டம்,நன்னிலம் வட்டம்,கோயில்தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள மத்தியபுரீசவரர் திருக்கோயிலில் வடக்கு பக்கசுவரில் பொறிக்கபட்டுள்ள கல்வெட்டு,வைத்தியசாலை அமைந்திருந்துள்ளதை குறிப்பிடபடுகிறது. இதில் தென்கரைநித்தவினோதவளநாட்டிலுள்ள நல்லூர் நாட்டில் அமைந்திருந்த ராசாகேசரிசதுர்வேதிமங்கலத்தில் ஆழ்வார் சிரிபராந்தகன் குந்தவைபிராட்டியார்,அவ்வூர் சபையார்களிடம் 70 காசுகள் கொடுத்து நிலம் வாங்கியுள்ளார். பின்னர் அதை வைத்தியபோகத்திற்கு தானமாக கொடுத்துள்ளார். இதன் மூலம் வைத்தியசாலை ஒன்று அங்கு செயல்பட்டதை அறியமுடிகிறது.
மாயவரம்வட்டம்,திருவாடுதுறையில் உள்ள கோமுட்டீஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு சுவரில் இம்மன்னரின் 4ம் ஆட்சியாண்டில் (கிபி 1016)பொறிக்கபட்டுள்ள கல்வெட்டில் வைத்தியசாலைக்கு,வைத்தியப்போகக்காணியாக நிலம் கொடுத்துள்ளதை பற்றிய செய்திவந்துள்ளது.இதில் ராசேந்திரசிங்கவளநாட்டில் உள்ள இன்னம்பர்நாட்டில் இருக்கும் பிரமதேயம் பழையவானவன் மாதேவி சதுர்வேதிமங்கலத்தில் வைத்தியசாலை ஒன்று செயல்பட்டுவந்துள்ளது.இந்த வைத்திய சாலையில் இலவசமாக வைத்தியம் செய்துவந்த,உய்யகொண்டார் வளநாட்டிலுள்ள சோழேந்திரமங்கலத்தில் வசித்துவந்த பாரத்துவாசி அரையன் சண்டேசுவர கருணாகர உத்தமசோழன் அசலணியருக்கும்,இவன் வர்த்தகத்தார்க்கும்,ஆழ்வார் குந்தவை பிராட்டியார்,இவர்கள் வசிப்பதற்க்கு மனையும்,சீவனதிற்க்கு வைத்திய காணியாக நிலமும் கொடுத்துள்ளதை அறியமுடிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம்,நன்னிலம் வட்டதிலுள்ள கோவில்தேவராயன் பேட்டையில் உள்ள மத்தியபுரீஸ்வரர் வடக்குபக்கசுவரில் இம்மன்னனின் 7 ம் ஆட்சியாண்டு (கிபி 1019) கல்வெட்டில் ஆதுலர் சாலையை பற்றிய செய்திவந்துள்ளது. இதில் தஞ்சாவூர் கூற்றத்தில்,தஞ்சாவூரில் அமைந்துள்ள சுந்தரசோழ விண்ணகர் ஆதுலர்சாலையில் வைத்தியம் செய்வதற்க்கு ராஜகேசரிசதுர்வேதிமங்கலதிலிருந்து கொடுதுவந்த நிவந்தம் இந்த ஆதுலர் சாலையில் வராமல் இருந்துள்ளது.இதனையரிந்த ஆழ்வார் சிரிபராந்தகன் சிரிகுந்தவை பிராட்டியார்,நித்தவினோதவளநாட்டிலுள்ள நல்லூர் நாட்டில் அமைந்திருந்த பிரமதேயம் ராஜகேசரிசதுர்வேதிமங்கலத்தில் இருக்கும் சபையார்களுக்கு,அந்திவந்தம் கொடுப்பதற்க்கு உத்தரவு இட்டுள்ளார். இதன்படி ராஜகேசரிசதுர்வேதிமங்கலத்தில் உள்ள ராயூர் எச்சக்கோபகிரமவித்தன் என்பவர்,ஆழ்வார் சிரிபராந்தகன் சிரிகுந்தவை பிராட்டியாரிடம்,அந்த ஆதுலர் சாலையின் நிவந்ததிற்காக ஒன்பது மா,நிலத்தையும்,ஒன்றகால் மனையும் கொடுத்து,வைத்திய போகத்துக்கு தேவையான காசும் கொடுத்துள்ளார். இந்நிலத்தையும்,மனையையும் சத்தியசிகாமணி-வளநாட்டிலுள்ள மருகல்நாட்டில்இருந்த மருகல் சுவர்ணன் அரையன் மதுராந்தகனும்,இவன் வர்க்கதாரும் முன்னர் நின்று போயிருந்த நான்கு ஆண்டுகால நிவந்தபாக்கியை ராஜேந்திரசோழரின் 3ம் ஆட்சியாண்டு முதல் வரி இல்லாத வைத்தியபோககாணியாக இந்த இரண்டு பேர்களும் பெற்றுக்கொண்டுள்ளதை அறியமுடிகிறது.
இப்படி வரலாற்று காலத்தில் கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்ககபட்டுள்ள மருத்துவர்கள் மனிதர்களின் உயிக்காக்கின்ற கடவுளாகவே கருதப்பட்டனர். அக்கால மருத்துவர்களும்,மனிதர்களின் மகத்தான உயிரை காப்பதே தம்மவர் கடமை என்று பணிபுரிந்துள்ளனர். தற்பொழுது மருத்துவம் படிப்பது மனிதனின் உயிர் காப்பதற்க்கு அல்ல அது பணம் சம்பாதிக்கின்ற தொழில் என்று எண்ணம் கொள்ள செய்துள்ளது. இந்நிலை மருத்துவர்களிடம் மாறவேண்டும்.
0 Comments